அ.தி.மு.க. மாநாடுகள் கின்னஸ் சாதனைக்குத் தகுதியுள்ளவையா?

Posted on ஒக்ரோபர் 25, 2010

0அ.தி.மு.க. மாநாடுகளில் திரளுகிற கூட்டம் கின்னஸ் சாதனை என்று சொல்லுகிறாரே ஜெயலலிதா?

– மு. அரங்கநாதன், திருமலைராயன் பட்டிணம்

அப்படி உண்மையிலேயே கின்னஸ் சாதனை என்றால், சில லட்சங்களைச் செலவு செய்து அதைக் கின்னசில் பதிவு செய்திருக்கலாமே? அ.தி.மு.க. போன்ற பெரிய கட்சிகளுக்கு அது ஒன்றும் பெரிய செலவில்லையே?

ஒரு மாவட்டத்தில் நிகழ்கிற மாநாட்டுக்கு 12 லட்சம் பேர் வந்ததைப் பெரிய விஷயமாகச் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. 20 லட்சம் பேர் வந்திருந்தாலும் அது ஒன்றும் வியக்கத்தக்க விஷயமல்ல. தமிழகத்தில் ஐந்து கோடி வாக்காளர்கள் இருப்பதாக கணக்கு வைத்துக் கொண்டாலும் 20 லட்சம் என்பது வெறும் 4 சதவீதம் மட்டுமே. அ.தி.மு.க. போன்ற கட்சிக்கு 4 சதவீதம் வாக்குவங்கி இருப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை.

மாறாக அந்த 12 லட்சம் பேரும் ஒரே தொகுதியைச் சேர்ந்தவர்கள் இல்லை. அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள், அ.தி.மு.க. தொண்டர்கள் வந்த வாகனங்கள் 10 கி.மீ, 15 கிமீ, 25 கிமீ தூரத்துக்கு முன்பாகவே தடுத்து நிறுத்தப்படுகிறது என்று. 25 கிமீ நடந்து வந்து மாநாட்டில் கலந்து கொள்கின்றனர் என்றால் அவர்கள் ஒரே தொகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியுமா?

ஒரு தொகுதியில் குறைந்த பட்சம் இரண்டரை முதல் ஆறு லட்சம் வாக்காளர்கள் தான் இருக்க முடியும். அனைத்து மாவட்டத் தொண்டர்களும் உற்சாகமாகக் கலந்து கொண்டனர் என்று தான் ஒவ்வொரு மாநாட்டிற்கும் சொல்கிறார்கள். அப்படி என்றால் 20 லட்சம் பேர் கலந்து கொண்டனர் என்று வைத்துக் கொண்டாலும் அதில் 234 தொகுதிகளின் வாக்காளர்களும் இருக்கிறார்களே!

கோவையில் கலந்து கொண்ட 8 லட்சம் பேரில் திருச்சி மாநாட்டுக்குக் குறைந்தது ஏழரை லட்சம் பேராவது வந்திருப்பார்கள். ஆக திருச்சியில் கலந்து கொண்ட 10 லட்சம் பேரில் சற்றேரக்குறைய 7.5 லட்சம் பேர் கோவை மாநாட்டிற்கு வந்தவர்கள் தான். அதே கதை தான் மதுரைக்கும். இதை எப்படி 8 + 10 + 12 என்று கணக்குப் போட முடியும்?

ஒரு கட்சி மாநாட்டுக்குக் கூடுகிற தலைக் கணக்கை எந்தக் கட்சியாக இருந்தாலும் தங்கள் சாதனையாகச் சொல்லிக் கொள்ள முடியாது. அது ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க் கட்சியாக இருந்தாலும் இது தான் உண்மை.

Advertisements