வினவும் வினவுக்கெதிராக ஒரு ஆணாதிக்க சிண்டிகேட்டும்

Posted on ஜூன் 2, 2010

6பதிவு எழுத வரும் முன்பாக நான் எடுத்துக் கொண்ட ஒரு உறுதிமொழி, எக்காரணம் கொண்டும் வலையுலகின் செயற்பாடுகளைக் குறித்து வினையாற்றுதல் அல்லது எதிர்வினையாற்றுதல், இரண்டையுமே செய்யக் கூடாது என்பதே. வலையுலகின் சமீபத்திய நிகழ்வுகள் அந்த உறுதியிலிருந்து என்னைச் சற்றே விலகி வரச் செய்திருக்கிறது.

எதிரியின் பாலியல் ஒழுக்கங்களைக் குறை சொல்லி நிகழ்த்தப்படுகிற கருத்தியல் வன்முறைக்கெதிரான விவாதங்கள் முன்னெடுக்கப்பட இதுவே சரியான தருணம் என்று கருதுகிறேன். கருத்தியல் வன்முறைகள் வரவேற்க்கத் தக்கதல்ல என்ற போதும், ஆண் பெண் சமத்துவம் குறைந்தபட்சம் இந்தக் கருத்தியல் வன்முறையிலேனும் இருக்குமா என்று பார்த்தால் அதிலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

பெண்ணின் மீதான கருத்தியல் வன்முறை என்பது அவளைக் தேவிடியாளாக, அவுசாரியாக, குச்சிக்காரியாக, விபச்சாரியாக, வேசியாக நிறுவுகிறதென்றால் ஆணின் மீதான கருத்தியல் வன்முறை, மேலே சொன்ன சொற்களுக்குப் பக்கத்தில் “மகனே” என்ற ஒரே ஒரு பதத்தைச் சேர்த்துக் கொள்வதாக மட்டுமே இருந்து வருகிறது. ஆக ஆணின் மீது நிகழ்கிற கருத்தியல் வன்முறையும் சுற்றி வளைத்துப் பெண்களையே குறிவைக்கிறது.

பெண்கள் மீதான இவ்வகை வன்முறை ஆண்களால் மட்டுமே ஏவப்படுகிறது என்றோ ஆண்கள் மீதான இதே வகை வன்முறை பெண்களால் மட்டுமே ஏவப் படுகிறது என்று சொன்னால் அது பச்சைப் பொய். எத்தனையோ குழாயடிச் சண்டைகளில் மேலே சொன்ன சொற்களைப் பெண்கள் மீது பெண்களே பிரயோகிப்பதைப் பலரும் பார்த்திருக்கலாம் கேட்டிருக்கலாம். “ஒரு அப்பனுக்குப் பொறந்திருந்தா என் மேல கை வைடா” என்று ஒரு ஆணிடம் இன்னொரு ஆண் அறைகூவல் விடுப்பதும் நாம் அறிந்திராத ஒன்றல்ல. இதில் சுட்டப்படுவது யாராக இருந்தாலும் சுடப் படுகிறவர்கள் அணைவரும் பெண்களாகவே இருக்கிறார்கள்.

தேவிடியா மகன் அல்லது மகள் என்று சொல்லி ஒருவரை வசைபாடும் போது, “தேவிடியாளுக்கு மகனாகவோ மகளாகவோ பிறந்தவர்கள் பாலியல் ஒழுக்கத்துடன் வாழ்ந்ததே இல்லையா, அல்லது வாழ வாய்ப்பே இல்லையா” என்று தங்களைத் தாங்களே கேள்வி கேட்டுக் கொள்ளுகிற பகுத்தறிவு ஏன் ஒருவருக்குமே இல்லை?

எல்லாமே வருவாயை முன்னிறுத்தி வயிற்றுப்பாட்டுக்காகச் செய்யப்படுகிற தொழில்கள்தான் எனும் போது கோயில் குருக்கள், பண்ணையார்களின் வாரிசுகளாகப் பிறப்பதில் என்ன பெருமை இருந்துவிட முடியும் அல்லது விபச்சாரிகள், விபச்சாரத் தரகர்களின் பிள்ளைகளாகப் பிறப்பதில் என்ன இழிவு இருந்துவிடப் போகிறது? இதில் ஒரு சாரார் பெருமையாக உணரவும், ஒரு சாரார் அவமானத்தில் கூனிக் குறுகவும் எது காரணம்?

பொறுப்பு மிக்க வலையுலகம் இதற்கு என்ன செய்யப் போகிறது? பாலியல் ஒழுக்கங்களை முன்னிறுத்திச் செய்யப் படுகிற கருத்தியல் வன்முறைகளைத் தவறு என்று உணர்ந்து அவற்றைக் கைவிடப் போகிறதா? அல்லது பாலியல் ஒழுக்கத்தை முன்னிறுத்திய கருத்தியல் வன்முறை செய்வதற்கு உதவியாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனியாகக் கலைச் சொல் அகராதி தயாரித்தளிக்கப் போகிறதா?

இந்த சிந்தனைகளுக்கு தூண்டுதலாக இருந்த, விரிவான விவாதத்திற்கு வழியமைத்துக் கொடுத்த, வினவு தோழர்களைப் பாராட்டுகிறேன். அதே வேளையில் வீரியமிக்க இந்த விவாதத்தை முன்னிறுத்தி வினவு தோழர்களுக்கு எதிராக ஒரு சிண்டிகேட் உருவாகியிருப்பதையும் அறிகிறேன். இத்தறுவாயில் வினவை ஆதரிப்பது உண்மையிலேயே ஆணாதிக்க சிந்தனைகளுக்கு எதிராக நிற்கிற ஒவ்வொருவரின் கடமையுமாகிறது. அந்த வகையில் வினவுக்கு என்னுடைய ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பு: இது குறித்த விவாதத்தில் விருப்பமுள்ளோர் இப்பதிவில் உள்ள கருத்துக்களைக் குறித்த தங்களது சிந்தனைகளைப் பதிவுகளாகவும் பின்னூட்டங்களாகவும் எழுதக் கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்புடைய இடுகைகள்:

வினவு: பதிவரசியல்: பொறுக்கி நர்சிமை என்ன செய்யலாம்? மற்றும் சுகுணா திவாகர்: பொறுக்கி நர்சிம்மின் புதிய அடியாள் !!

தோழர் கார்கி: கருத்துரிமை, காவாளித்தனம், நர்சிம் உ.த மற்றும் சில மொக்கைகளும்

பைத்தியக்காரன் @ சிவராமன்: வினவு தோழர்களை ஆதரிப்போம் வாருங்கள்

மாதவராஜ்: நர்சிம், கார்க்கி…. த்தூ! மற்றும் சிராய்ப்புகளையும், சேதங்களையும் தாண்டி…

ஒருவார்த்தை: பதில் சொல்லுங்கள் பதிவர்களே…?

சூப்பர் லிங்க்ஸ்: ஆணாதிக்க‌ பொறுக்கி நர்சிமையும் அவனுக்கு ஆதரவாக நிற்கும் பொறுக்கிகளையும் தனிமைப்படுத்துவோம்.

செந்தழல் இரவி: புனைவாக எழுதுதல் !

தோழர் அசுரன்: ஆணாதிக்க பார்ப்பனியத்தை எதிர்த்து!

எஸ். பாலபாரதி: பதிவரசியல்: என் இரண்டு பைசா

அக்கினிப் பார்வை: உண்மைதமிழன் யார் போதைக்கு நீங்கள் ஊறுகாய்

மருத்துவர் ருத்திரன்: நடுநிலை நாடகம்

சர்வதேசவாதிகள்: ஆணாதிக்கப் பொறுக்கித்தனத்தை தனிமைப்படுத்துவோம் !

Advertisements