கோபாலபுரம், வீதி எண் 4, கதவு எண் 8ல் கடவுள்

Posted on மே 14, 2010

0எஸ்.வி. சேகரை நடிகவேளுடன் ஒப்பிட்டுப் பாராட்டியிருக்கிறாரே தமிழக முதல்வர்? இது நடிகவேளை அவமானப்படுத்தும் செயலில்லையா? – தளவாய் ராமையா, கன்யாகுமரி

இறை நம்பிக்கையாளர்கள் ஒன்றைச் சொல்வார்கள், “கடவுள் உண்டு என்று சொல்லுபவர்கள் கூட கடவுளை எப்போதாவது நினைத்து வழிபட்டுவிட்டு தன் வேலையைப் பார்க்கப் போய்விடுவான். கடவுள் இல்லை என்று சொல்லுகிற நாத்திகர்கள் தான் கடவுளை எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். கடவுள் அவர்களுக்குத்தான் எப்போதும் அருள் பாலிப்பார்” என்று.

கருணாநிதி தன்னையும் கடவுள் என்று நினைத்துக் கொண்டாரோ என்னவோ? அதனால் தான் வைதாரையும் வாழ வைக்கிறார் போலும் கருணாநிதிப் பெருமான். பெருமானாரின் அருளை இதற்கு முன்பு இவ்விதம் பெற்றவர் ஜெயகாந்தன். மகனுக்கு அரசு வேலை, பத்ம பூஷன் விருது என்று அண்ணாருக்கு பெருமான் அருள் பாலித்தது கொஞ்ச நஞ்சமல்ல.

ஜெயகாந்தனை அடுத்து பெருமானாருக்கு இவ்விதமாகக் கிடைத்திருக்கும் பரம பக்தர் எஸ்.வி. சேகர். ஜெயகாந்தனை விடவும் எஸ்.வி. சேகரின் “தகுதியும் திறமையும்” தவறாமல் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட வேண்டியவை.

2004ம் ஆண்டின் இறுதியில் சுனாமி பேரழிவு ஏற்பட்ட போது கடலுக்கு அருகிலிருந்த சீனிவாசபுரம் பகுதி மக்கள் வீடுகளை இழந்து வீதிகளில் தங்கி இருந்தனர். அப்போது எஸ்.வி. சேகர் அவ்வாறு தன் வீட்டு முன்பு தங்கி இருந்த மக்களைக் கார் போக வர இடைஞ்சலாக இருக்கும் என்று விரட்டி விட்டார். இது முதல் தகுதி.

அடுத்ததாக சங்கராச்சாரிகளை ஜெயலலிதா அம்மையார் கைது செய்யும் வரை எஸ்.வி. சேகர் வீட்டின் முன்பு ஃப்ளெக்ஸ் போர்டில் சந்திரசேகரனும் ஜெயேந்திரனும் விஜயேந்திரனும் சிரித்துக் கொண்டிருந்தனர். அண்ணா தி.மு.க. விலிருந்து சட்டமன்ற உறுப்பினராக வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கைதுக்குப் பிறகு அந்த ப்ளெக்ஸ் போர்டை நீக்கினார். இது இரண்டாவது தகுதி.

தி.மு.க வைச் சேர்ந்த ஒரு அமைச்சர் மத்திய தொலைதொடர்புத் துறையின் அமைச்சராக இருக்கிறார் என்பதால் அதுவரை வீட்டிலிருந்த பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்பைத் துண்டித்துக் கொண்டதாகப் பத்திரிகைக்குப் பேட்டியளித்தார். அதன் பிறகு தனியார் தொலைபேசி இணைப்பு வைத்திருப்பதாகச் சொன்னார் அறியாப் பிள்ளை எஸ்.வி. சேகர். அந்தத் தனியார் தொலைபேசி நிறுவனமும் தி.மு.க அமைச்சரின் துறைக்குக் கட்டுப்பட்டது என்பது அவருக்குத் தெரியவில்லை. ஆனால் இப்போது தி.மு.க வைச் சேர்ந்தவர் தொலைதொடர்புத் துறையின் அமைச்சராய் இருப்பதை எல்லாம் பெருந்தன்மையுடன் மன்னித்து தி.மு.க வை நெருங்கி வருகிறார். இது மூண்றாவது தகுதி.

திராவிட முன்னேற்றக் கழகம் “தகுதி திறமைகளை” எப்போதும் மதிக்கத் தவறியதில்லை. அதனால் தான் சொந்த மற்றும் அரசு அலுவல்கள் அனைத்தையும் ஒத்திப் போட்டு விட்டு எஸ்.வி. சேகரின் நாலாயிரமாவது நாடகத்தில் கலந்து கொள்ள முடிகிற கலைஞருக்கு, நடிகவேளின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக நடத்த நேரமில்லை போலும்.

Advertisements