நித்தியும் ரஞ்சியும் சாருவும் பின்னே ஞாநியும்…

Posted on மார்ச் 16, 2010

3தலைப்பைப் பார்க்கிற நண்பர்கள் சிறிது குழப்பமடைய நியாயம் இருக்கிறது. நித்தி-ரஞ்சி விவகாரத்தில் நித்தியை வானளாவப் புகழ்ந்து எழுதிய சாருவை அம்பலப்படுத்துவது நியாயம், ஆனால் இதில் ஞாநி எங்கே வந்தார் என்பது வாசிப்பவர்களின் நியாயமான ஐயப்பாடுதான். அதையும் விளக்குகிறேன்.

சாருவுக்கும் ஞாநிக்குமான முட்டல் உலகப் பிரசித்தம். ஞாநி சமீபத்தில்தான் சாருவை இண்டர்நெட் பிச்சைக்காரன் என்று வசைபாடினார். “கோலம்” திரைப்பட இயக்கத்துக்கு அதே இண்டர்நெட் பிச்சை வடிவத்தில்தான் ஞாநியும் நிதி திரட்டுகிறார் என்பது அவருக்கு மறந்துபோய் விடுகிறது, பாவம்.

நித்தி-ரஞ்சி விவகாரம் வெளியானதும், சாரு தன் எழுத்துக்களால் அம்பலமானார் என்றால் ஞாநி குமுதத்தைக் குறித்த அவரது கள்ள மௌனத்தால் அம்பலப்படுகிறார். எழுபத்தி இரண்டு மணிநேரம் தமிழகத்தை வேறு எதைக் குறித்தும் சிந்திக்கவிடாமல் செய்த சன் டிவியையும், நக்கீரனையும் கண்டித்த ஞாநி, நித்தியானந்தன் என்ற கிரிமினலை தமிழக மக்களிடம் மார்க்கெட் செய்த குமுதத்தைக் குறித்து எவ்விதக் கண்டனமும் தெரிவிக்கவில்லை.

சன் டிவியும் நக்கீரனும் நிகழ்த்திய ஆபாசத் திணிப்பு கண்டிக்கத்தக்கது என்பதில் துளியளவும் ஐயமில்லை. ஆனால், குமுதம் பத்திரிகை நித்தியானந்தன் மீது பாய்ச்சிய வெளிச்சம்தான் நித்தியானந்தன் ஒரு நடிகையுடன் சல்லாபித்த காட்சிகள் அம்பலமான போது மக்கள் இத்தனை பெரிய அதிர்ச்சியடையக் காரணமாகியிருக்கிறது. இல்லையெனில் காஞ்சிபுரம் தேவநாதன் விவகாரத்துக்கு என்ன மரியாதையோ அதேதான் இதற்கும்.

தேவனாதன் விவகாரம் வெளியான போது எவ்வித அதிர்ச்சி அலையும் மக்களிடையே ஏற்படவில்லை. ஏனெனில் தேவநாதன் அதிக சர்குலேஷன் உள்ள எந்தப் பத்திரிகையாலும் புரொமோட் பண்ணப்படவில்லை. ஆனால் தேவனாத லீலை பார்ப்பனியம் எத்தகையது என்று உரைத்துப் பார்க்கிற உரைகல்லாக விளங்கியது. நிற்க. நாம் இப்போது ஞாநி விவகாரத்துக்கு வருவோம்.

நக்கீரன் கோபால் மற்றும் கலாநிதி மாறன் மீது நித்தியானந்தன் நினைத்தால் வழக்கே தொடுக்க முடியும் என்று நித்தியின் இலவச வழக்கறிஞராகவே அவதாரமெடுக்கிற ஞாநி ஒரு விஷயத்தை பஞ்சாரம் கவிழ்த்து மறைக்கிறார். இவ்விவகாரம் வெளியான மறுநாள் குமுதம் இணையதளம் இலவச தளமாக இருந்த போது சப்ஸ்கிரைப் செய்திருந்த வாசகர்களுக்கு குமுதம் தரப்பிலிருந்து ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. “நடிகையுடன் சாமியார் இருக்கிற முழு வீடியோவையும் பார்க்க குமுதம் இணைய தளத்துடன் இணைந்தே இருங்கள்” என்பதை ஒத்த ஒரு வாசகம் நித்தி ரஞ்சிதா படத்துடன் அனுப்பி வைக்கப்பட்டது. மீண்டும் சில நாட்களுக்கு அப்பால், ரஞ்சிதா சாமியாருக்கு ஆயில் மசாஜ் செய்யும் காட்சிகள் என்று குமுதம் தரப்பிலிருந்து இன்னொரு மின்னஞ்சலும் அனுப்பப்பட்டது.

சன் டிவி இவ்விவகாரத்தை டி.ஆர்.பி புள்ளிகளாக அறுவடை செய்தது என்றால் நக்கீரனும் குமுதமும் இணைய தளத்துக்கான கட்டணமாக அறுவடை செய்திருக்கிறது. ஆக நித்தி நினைத்தால் விஷயம் அம்பலமானவுடன் யூ டர்ன் அடித்த குற்றத்துக்காக குமுதத்தின் கௌரவ ஆசிரியர் எஸ்.ஏ.பி. ஜவகர் பழனியப்பன் மீதும் சேர்த்தே வழக்குத் தொடுக்க முகாந்திரமுள்ளது.

சன் டிவி, கலைஞர் டிவி, மற்றும் நக்கீரனில் காட்சிகளாகவும் எழுத்துக்களாகவும் விரிகிற ஆபாசத்தை விட நித்தியானந்தனின் படுக்கையறைக் காட்சியிலிருந்த ஆபாசம் குறைவானதே என்று எடுத்துக் கொடுக்கிற ஞாநி குமுதத்தில் அரசு பதில்களையும், லைட்ஸ் ஆன் சுனிலையும் மறந்துவிட்டார். இவை இரண்டும் முன் சொன்னவற்றுக்குச் சிறிதும் குறையாதவை.

யோக்கியமாக வாழ வழி தெரியாத ஞாநி, “என் வாழ்க்கை என் கையில்” என்று அனைவருக்குமான வாழ்க்கை வழிகாட்டி நூல் எழுதுவது தான் நகைச்சுவையின் உச்சம் என்று சொல்ல வேண்டும். ஒரு வேளை ஒவ்வொருத்தரையும் ஞாநியாக்க என்ன வழின்னு யோசிச்சு எழுதியிருப்பாரா இருக்கும்… இரண்டு லட்சம் பெறுமானமுள்ள இதய அறுவை சிகிச்சையினால் பட்ட கடனைத் தீர்க்க இன்னும் இருநூறு வாரங்கள் எழுத வேண்டிய ஞாநியிடம் இதையெல்லாம் ஏன் ஞாபகப்படுத்துகிறாய் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. பாவம் அவரும் ஒரு எழுத்துக்காரர் தானே [எழுத்தாளர் அல்ல, மீன்காரர், பால்காரர், பழக்காரர் மாதிரி எழுத்துக்காரர்].

Advertisements