அவங்களும் பெரியாரை மதிக்கிறாங்கள்ள…

Posted on மார்ச் 2, 2010

0உங்களுக்கு வெகுஜனப் பத்திரிகைகள் மீது ஏன் இத்தனை காழ்ப்புணர்ச்சி? ஆனந்த விகடன்ல கூட பெரியாரை சிறப்பித்து “பெரியார்-25” கட்டுரை வந்திருக்கே நீங்க பாக்கலியா? – அயன்புரம் கிருஷ்னமூர்த்தி, சென்னை

ஆமாம். நான் கூட அதப் படிச்சிட்டு பெரியார் ரகசியமா இவனுங்களுக்கு ஏதாவது உபகாரம் பண்ணிருப்பாரோன்னு அவரையே சந்தேகப்பட்டுட்டேன். 78ம் பக்கத்தப் பாத்த உடனே அவர சந்தேகப்பட்டது தப்புன்னு புரிஞ்சுது. அய்யய்யோ, இந்த ஆளப் போய் பாராட்டி எழுதிட்டோமேன்னு பக்கம் 78ல ஒரு அவதூறு கார்ட்டூன், பெரியார் இடுப்புல துண்டக் கட்டிக்கிட்டு புள்ளையாரக் கும்புடுற மாதிரி. ஆனந்த விகடன் மாதிரி பத்திரிகைகள் பெரியாரைப் புகழும்போது வருந்துபவனும், அதே பத்திரிகைகள் அவரை இழித்துரைக்கும் போது பெரியார் சரியான பாதையில் தான் சென்றிருக்கிறார் என்று புரிந்து கொள்பவனுமே உண்மையான பகுத்தறிவாளனாக இருக்க முடியும்.

எனக்கு வெகுஜனப் பத்திரிகைகள் மீது காழ்ப்புணர்ச்சி இல்லை. ஆனால் அளவிட முடியாத கோபம் இருக்கிறது. அது கூட அவற்றின் மீதான நேரடிக் கோபம் கிடையாது. வெகுஜன ஊடகங்களின் வாய்ப்புக்காக எவ்விதமான சமரசங்களையும் செய்து கொள்ளுகிற சோ-கால்ட்-முற்போக்காளர்களின் மீதான கோபமே அது. நெல்லுக்குப் பாயுறது கொஞ்சம் புல்லுக்கும் பாயுற மாதிரி அந்தப் பத்திரிகைகள் மேலயும் கொஞ்சம் பாயுது. ஆமா… அவனுங்களைச் சொன்னா உனக்கேன் இவ்வளவு அக்கறை?

Advertisements